கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, ஏழை, எளிய மாணவர்களுக்கு அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு உறுதிபடுத்தப்பட வேண்டும் என்கிற தமிழக அரசின் உத்தரவுக்கு ஆதரவு, எதிர்ப்பு என கலவையான எதிர்வினைகள் ஏற்பட்டுள்ளது.
சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் வழங்குவதை உறுதிப்படுத்தும் தமிழக அரசின் ஆணையின் மூலம், தனியார் பள்ளிகளின் நெடுங்கதவுகள் ஏழை மாணவர்களுக்கும் திறக்கும் என்ற நம்பிக்கை பெற்றோருக்குப் பிறந்திருக்கிறது.
ஆனால், ஆரம்பத்தில் இந்த சட்டத்தை எதிர்த்த தனியார் பள்ளிகள் தரப்பினர், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு உரிய நேரத்தில் வழங்குமானால், இடங்களை ஒதுக்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்தச் சட்டத்தின் மூலம் பெற்றோர்களுக்கும், தனியார் பள்ளிகளுக்குமான மோதல் அதிகரிக்கும் என்று சொல்லும் கல்வியாளர்கள், 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு செலுத்தும் என்பதற்கு பதிலாக, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தனது பள்ளிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும் என்கிறார்கள்.
சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை உறுதிப்படுத்துவது வரவேற்கத்தக்கது என்றாலும், இதனைக் கூர்ந்து கவனிக்க தனியான கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்துவதற்கான தேவையும் இருக்கிறது என்பதே அனைவரின் கருத்தாகவும் உள்ளது.