கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.
கல்வியின் வீரியம், கல்வியின் சிறப்பு, கல்வியின் பெருமை என கல்வியின் மகத்துவத்தை உணர்ந்த நாம் அறிவுக் கவிஞன் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தை இந்த பொன்னான வரிகளில் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது.
பொன், பொருள் அழியக் கூடும். ஆனால் கல்வி என்னும் செல்வம் காலத்தால் சாகாவரம் பெற்றவை என்பதற்கு மாற்று கருத்து கிடையாது. ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் கல்வியில் சாலச்சிறந்தவர் ஆக வேண்டும் என்பதே அனைவரின் கனவு,ஆசை, லட்சியமாக உள்ளது.
கல்வி பலருக்கு உலகத்தை காட்டியுள்ளது. கல்வி பலரின் இருண்ட வாழ்கைக்கு கலங்கரை விளக்கமாய் உள்ளது. கல்வி எனும் சோலையில் கால் பதித்து தான் பெற்ற கல்வியால் தன் வாழ்க்கையில் வெற்றிக்கொடி கட்டி இவ்வுலகத்தால் அறியப்பெற்ற, போற்றப்பற்றவர்கள் எண்ணிக்கை அதிகமே...
ஒரு மனிதன் கல்வி கற்பதன் மூலம் தனி மனித முன்னேற்றத்திற்கு மட்டும் இன்றி அவன் வாழும் சமூகமும் அவன் பெற்ற கல்வியால் நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்னேற்றம் அடைகிறது என்பது நான் அனைவரும் அறிந்ததே...
சாகாவரம் பெற்ற முத்தான கல்வியை முத்து முத்தாக மாணவ, மாணவிகளுக்கு தெளிந்த நீரோடையாக வழங்குவது ஒரு அரசின், ஒவ்வொரு ஆசிரியரின் பொறுப்பு.
தமிழகத்தில் மட்டும் ஆரம்ப பள்ளி, நடுநிலை பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர் நிலை பள்ளி என மொத்தம் 53722-க்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் இருப்பதாக புள்ளிவிபரம் காட்டுகிறது.
பொதுவாக தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கும் தரமான கல்வியை புகுட்டுவது அரசின் கடமை. இன்றைய காலகட்டத்தில் அரசு பள்ளிகளில் கல்வி கடமையாக எடுத்து கற்பிக்கிறார்களா? அல்லது கடமைக்காக கற்ப்பிக்கப்படுகிறதா? என்ற கேள்வி நம் மனதில் தோன்றக் காரணம் ஆர்.எம்.எஸ்.ஏ என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்த அதிர்ச்சி தகவல் தான்.
ஆம், “ஒரு ஆசிரியர் கூட இல்லாமல் தமிழகத்தில் 16 அரசு பள்ளிகள் செயல்படுவதாக” கணக்கெடுப்பில் கூறியுள்ளார்கள். இதன்படி விழுப்புரம்,சென்னை,வேலூர்,நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் ஒரு ஆசியர் கூட இல்லாமல் 16 அரசு பள்ளிகள் இயங்கி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 2,253 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 195 பள்ளிகள் ஒரு ஆசிரியரை கொண்டு இயங்குகின்றன. அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 159 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 134 பள்ளிகளிலும், வேலூர் மாவட்டத்தில் 127 பள்ளிகளிலும் ஒரே ஒரு ஆசிரியர் இருக்கின்றனர்.
இது தவிர 16,421 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருக்கின்றனர். மாநிலம் முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறையால் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் உட்பட சுமார் 84 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆர்.எம்.எஸ்.ஏ என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பு நம் மனதில் வேதனையை அதிகரிக்கிறது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம், விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியரே இல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த களையூர் பகுதியில் இயங்கி வரும் ஆரம்பப் பள்ளியில் தான், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பலர் தங்களது தொடக்கக் கல்வியைப் பெற்றுள்ளனர்.
கடந்த 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வ.உ.சி ஆரம்பப்பள்ளி, அரசு நிதி உதவியுடன் செயல்பட்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு அரிய பொக்கிஷமாக திகழ்ந்த இந்தப் பள்ளி தற்போது மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காரணம் 50 மாணவர்கள் வந்துப் போகும் இந்த பள்ளியில் தற்போது பணியாற்றுவது ஒரு தற்காலிக ஆசிரியர் மட்டுமே.
மாவட்ட கல்வி நிர்வாகத்தால் மூன்று மாதங்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் வேறு பள்ளியில் இருந்து வரவழைக்கப்பட்டு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படி நிலையற்ற ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வியின் மீதான ஆர்வம் குறைந்து வருவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். முழுமையான கல்வி கிடைக்காத இந்தப் பள்ளி மாணவர்களுக்கு முறையான சத்துணவும் கிடைக்கவில்லை.
திறந்தவெளியே இவர்களுக்கான சமையற்கூடம், சுற்றுசுவரும் இல்லை,பள்ளிக்கு மேற்கூரையும் இல்லை. இந்த நிலை நீடித்தால் அடுத்த ஆண்டின் முடிவிலும் தமிழகத்திலேயே விழுப்புரம் மாவட்டம் தான் கல்வியில் பின் தங்கிய மாவட்டம் என்ற செய்தியே மீண்டும் வரும் என்பதில் சந்தேகமில்லை.
விரைவில் பள்ளியை அரசு தத்தெடுத்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும், பள்ளிக்கு தரமான வசதிகளுடன் கூடிய கட்டடம் தேவை என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
- ப. தாமரைச் செல்வன்