ஒரு மாணவருக்கு ஒரே ஆண்டில் இரண்டு பட்டங்களை பல்கலைக்கழகங்கள் வழங்குவது கல்வியின் தரத்தை வெகுவாக பாதிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
ஜெகதீஸ்வரி என்ற பெண் கடந்த 2009-2010ம் கல்வி ஆண்டில் பி.எட்.படிப்பினை வழக்கமான முறையிலும், ஆங்கிலத்தில் முதுநிலை பட்டத்தை தொலைதூரக் கல்வி முறையிலும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஆங்கில ஆசிரியர் பணிக்கு அவர் விண்ணப்பித்த போது அவருக்கு பணி வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்துவிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முடிவை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன், வழக்கமான படிப்பு முறையில் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள், அதே ஆண்டிலேயே தொலைநிலைக் கல்வி முறையில் வேறொரு பாடத்தில் பட்டம் பெற்றால் அந்த பட்டம் செல்லாது என கூறி ஜெகதீஸ்வரியின் வழக்கை தள்ளுபடி செய்தார்.
ஜெகதீஸ்வரிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பணி வழங்க மறுத்ததில் எவ்வித தவறும் இல்லை என கூறிய நீதிபதி இங்குள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும், எந்தப் படிப்பையும் படிக்கலாம் என்ற நிலை காணப்படுவதால்,கல்வியின் தரம் வீழ்ந்து போவதாக வேதனை தெரிவித்தார்.