அரசுப் பள்ளிகளில் கணிப்பொறியியல் பாடத்துக்கு பி.எட். முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பதிலாக, வேறு கல்வித் தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.
வரும் கல்வி ஆண்டிலாவது, தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்று கணிப்பொறி அறிவியலில் பி.எட். முடித்தவர்கள் காத்திருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப்பள்ளிகள் அனைத்திலும் கணிப்பொறியியல் பாடம் கற்றுத் தரப்படுகிறது.
பிற பாடங்களுக்கு அத்துறையில் பி.எட். முடித்த ஆசிரியர்களே நியமிக்கப்பட்டு வரும் நிலையில், கணிப்பொறியியல் பாடத்துக்கு மட்டும் இதுவரை பி.எட். ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிப்பொறியியல் பாடத்தைக் கற்றுத் தருவதற்கு பி.எட். பட்டம் பெறாதவர்களை அரசு நியமித்துள்ளது.
இந்தப் பள்ளிகளில் இன்னும் 1600-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆனாலும், அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பணி நியமனத்தில், கணிப்பொறி அறிவியலில் பி.எட். படித்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் எல்காட் நிறுவனத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கணிப்பொறியியலில் ஏதாவது ஒரு பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருந்தால் போதும் என்ற அடிப்படையில் அவர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களுக்கு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் 667 பேர் தேர்ச்சி பெறவில்லை. இவர்களைப் பணி நீக்கம் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இவர்கள் பணியில் நீடிப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது எனத் தெரிவித்துவிட்டனர்.
கணினி ஆசிரியர் நியமிக்கப்பட்ட விதம்:
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 1999-ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் 1,850 பேர் கணினி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு 2,500 ரூபாய் சம்பளம் என்றும், ஐந்தாண்டுகளுக்கு இந்தப் பணிகளில் இவர்கள் தொடரலாம் என்றும் அரசு அறிவித்தது.
கணிப்பொறி ஆசிரியர் என்பதைக் குறிக்கும் முதுநிலை கணினி அறிவியல் ஆசிரியர் என்பதற்கு பதிலாக கணினி பயிற்றுநர் என்று இவர்களது பணியின் பெயர் குறிப்பிடப்பட்டது.
இவர்களது ஐந்தாண்டு காலப் பணி 2004-ம் ஆண்டு நிறைவடைந்தது. இதையடுத்து, தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் பல போராட்டங்களை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, 2006-ம் ஆண்டு ஓர் அரசாணை வெளியிடப்பட்டு, 2008-ம் ஆண்டு இவர்களுக்கென தனியாக ஒரு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வை எழுதிய 1,850 பேர்களில் 792 பேர் தேர்ச்சி பெறவில்லை.
இந்தத் தேர்வை எதிர்த்து 2008-ம் ஆண்டு முதுநிலையில் கணிப்பொறி அறிவியல் பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, 2010ம் ஆண்டு மீண்டும் ஒரு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதை எழுதிய 792 பேர்களில் 652 பேர் தேர்ச்சி பெறவில்லை.
இந்த இரண்டாவது தகுதித் தேர்வை எதிர்த்து கணிப்பொறி அறிவியல் பட்டதாரிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
இந்த வழக்கில் கடந்த 2012 டிசம்பர் மாதம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாதவர்கள் அனைவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
தீர்ப்புக்குப் பிறகும் இவர்கள் பணியில் தொடர்வதாக தற்போது சர்ச்சை எழுந்திருக்கிறது. இதுகுறித்து தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களின் கருத்தை அறிய தொடர்ந்து முயற்சித்த போதும், அவர்களின் கருத்தை அறிய முடியவில்லை.
மாணவர்கள் பாதிப்பு
அரசுப் பள்ளிகளில் முறையான கல்வித் தகுதி கொண்ட ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், கணிப்பொறி அறிவியல் படித்த பட்டதாரிகள் மட்டுமல்லாமல், கணிப்பொறி பயிலும் மாணவர்களின் கல்வித்தரமும் பாதிக்கப்படுகிறது என்ற புகாரை பல்வேறு தரப்பினரும் முன்வைக்கிறார்கள்.
எங்கும் கணினி எதிலும் கணினி என்றாகிவிட்ட நிலையில், மாணவர்களின் மோகமும் கணினித் துறையை நோக்கியே திரும்பி வருகிறது.
இப்படி பெரும்பாலான மாணவர்களால் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் இந்த பாடத்திற்கு ஆசிரியர்கள் முறையாக நியமிக்கப்படாததால் மாணவர்களுக்கு அந்தப் பாடம் குறித்த முழு அறிவை பெற முடியாத நிலையை அடைவார்கள் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்புகளில் மற்ற பாடங்களைவிட கணினிப் பிரிவை அதிக மாணவர்கள் தேர்வு செய்வதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படியிருக்க அரசு மூலம் முறையான ஆசிரியர்கள் நியமிக்கப்படாத காரணத்தால் பள்ளி நிர்வாகமே ஒரு கணினி ஆசிரியரை நியமிக்கும் நிலை உள்ளது.
இதனால் முறையான கல்வியின்றி பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் தனது மேற்படிப்பில் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கருதுகின்றனர் கல்வியாளர்கள்.
கணினியை பாடமாக எடுத்துப் படிக்கும் ஆசிரியர்களின் பாதிப்பு ஒருபுறமிருக்க மற்றொருபுறம் மாணவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.