ஆதரவற்ற குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் உறைவிடப் பள்ளி


   கற்றலில் திறன் இல்லாத, படிப்பில் ஆர்வம் இல்லாத மற்றும் ஆதரவற்ற நிலையில் படிப்பை தொடர முடியாத குழந்தைகளை தேர்ந்தெடுத்து, உணவளித்து கல்வி கற்பித்து வருகிறது ஒரு பள்ளி. விருதுநகர் மாவட்டம், குந்தலப்பட்டியில் உள்ள அந்த உண்டு உறைவிடப் பள்ளியின் சேவை நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
   விருதுநகர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 11 உண்டு உறைவிடப் பள்ளிகள் உள்ளன. அருப்புக்கோட்டை, திருச்சுழி உள்ளிட்ட மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த பல குழந்தைகள் வறுமை மற்றும் குடும்பச் சூழல் காரணமாக, படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ளனர். இத்தகைய குழந்தைகளை தேர்ந்தெடுத்து, குந்தலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள உண்டு, உறைவிட பள்ளியில் அவர்களுக்கு உணவளித்து, அடிப்படைக் கல்வி, கைத்தொழில் மற்றும் கணினி பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. குழந்தைகளின் கல்வி ஆர்வம் மற்றும் கற்றல் திறன் குறைபாட்டுக்கு பெரும்பாலும் வறுமை அல்லது குடும்ப சூழலே காரணமாக உள்ளது என்கின்றனர் இங்கு கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள்.
   56 குழந்தைகள் படிக்கும் இந்த பள்ளியில், இரண்டு ஆசிரியர்கள், விடுதிக் கண்காணிப்பாளர், சமையலர், காவல் பணியாளர் உள்ளிட்ட 6 பேர் உள்ளனர். மேலும் மாணவர்களின் வயது, கற்கும் திறனுக்கேற்ப சிறப்பு தனிப்பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. மாணவர்களுக்கு கல்வி புகட்டி, அடிப்படை மதிப்புகளான பொறுமை, அடக்கம் போன்றவற்றை வளர்க்க, நல்லொழுக்க நெறி வகுப்புகளும் நடத்தப்படுகின்ற. இதனால் இங்கு படிக்க தொடங்கிய பின், நல்ல உணவு, நல்ல உறைவிடம் கிடைத்துள்ளது மட்டுமன்றி கற்பதிலும் ஆர்வம் அதிகரித்திருப்பதாக கூறுகின்றனர் மாணவர்கள்.
  அனைவரும் அடிப்படைக் கல்வியை பெறுவது மூலமாகவே, அடுத்த தலைமுறையை சிறப்பானதாக உருவாக்க முடியும். இந்த இலக்கை எட்டுவதில், இதுபோன்ற உண்டு, உறைவிடப் பள்ளிகள் தங்களது பணியை தொடர்ந்து சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்பதையே சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
                                                         -பசுமை நாயகன்