10 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் விருத்தாச்சலத்தில் எரிக்கப்பட்டது.


     10 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் விருத்தாச்சலத்தில் எரிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
   இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த விவகாரம் குறித்து மாணவர்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
   விருத்தாச்சலம் ரயில் நிலைய அதிகாரிகளிடம் இருந்து கடலூர் முதன்மை கல்வி அலுவலரால் சரிபார்த்து பெற்றுக்கொள்ளப்பட்ட விடைத்தாள்கள், அரசுத்தேர்வுகள் இயக்ககத்தால் பெறப்பட்ட உடன், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   கடலூரில் இருந்து திருச்சிக்கு தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள்கள் அடங்கிய 90 கட்டுக்கள் ரயில்வே அஞ்சல் துறை மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அதில் ஒரு கட்டு விருத்தாசலம் அருகே கீழே விழுந்து சேதமடைந்ததாகவும், குப்பை என ரயில்வே தொழிலாளர்கள் அவற்றை கருதி எரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
   இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் கிடைக்கப்பெற்ற கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ரயில்வே அஞ்சல்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.