ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் இடஒதுக்கீடு


         தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏழைக் குழந்தைகள் கல்வி பெறுவதை உறுதி செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதில், ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இதற்கான மாணவர் சேர்க்கையை மே 3 முதல் 9ஆம் தேதி வரை நடத்தலாம் எனவும் அரசாணையில் கூறப்பட்டிருந்தது. இந்த காலக் கெடுவை நீக்கக் கோரி பாடம் நாராயணன் என்ற சமூக ஆர்வலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, அரசாணையில் இடம் பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள், ஏழை குழந்தைகளுக்கு எதிராக இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதுகுறித்து, வரும் 29ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.