இலவச கட்டாய கல்விச் சட்டம் முழுமையாகநடைமுறைப்படுத்தப்படுகிறதா


கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே – ஔவையார்
கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளித்துள்ளது நமது வரலாறும், பாரம்பரியமும். 
  இதற்காகவே, இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்தின் குழந்தைகள் கல்வி கற்க ஏதுவாக, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் இந்தத் திட்டம் முழுமையாகநடைமுறைப்படுத்தப்படுகிறதா.


   கடந்த 2009-ஆம் ஆண்டு கட்டாய கல்விச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதன்படி, அனைத்து சுயநிதி தனியார் பள்ளிகளில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர், எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள், அரவாணிகள், கணவனால் கைவிடப்பட்ட மகளிர் ஆகியோரின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
  இதற்கான கல்வி செல்வை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் தங்களது குழந்தைகளை சேர்க்க பள்ளி நிர்வாகத்தினர் மறுப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
  தன் குழந்தையை பள்ளியில் சேர்க்க 15க்கும் மேற்பட்ட பள்ளிகளை இதுவரை அணுகியும் முறையாக எந்த ஒரு பள்ளி நிர்வாகமும் பதிலளிக்கவில்லை என்றும் இதனால் தங்கள் குழந்தைகள் புறக்கணிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள். அரசின் அறிவிப்பாணைகளை செயல்படுத்த நிர்பந்திக்காத கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கையும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

   மேலும் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டிய கல்வி அதிகாரிகளோ, பள்ளி நிர்வாகங்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், தங்களது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கானல் நீராகும் கல்விக் கனவுகள்...
  அரசின் அறிவிப்பானைகளை செயல்படுத்தாமல் உள்ள பள்ளி நிர்வாகங்களால், ஏழை மாணவர்களின் கல்வி கனவுகள் கானல் நீராக மாறி வருவதாக சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.